Friday, April 29, 2011

அகப்பேய்.

“சரியை ஆகாதே அகப்பேய்
சா லோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை

யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே”

சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும் கூட இறையைக் காண முடியாது; இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக் காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.

நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய், புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார் அகப்பேய்.

அகப்பேய்ச் சித்தர்:

மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர் என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர் பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.

நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம்
செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார். மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும் அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார்.

துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம் பாடல்களில் பாடி வைத்தார்.

No comments:

Post a Comment